உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள கோரச் சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலித்து நம்பிச் சென்ற இளம்பெண்ணைக் காதலனும் அவனது நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 19 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளாக நாளாக அவர்களுக்கு இடையே காதலாக மாறியிருக்கிறது. காதலனின் மீதான முழு நம்பிக்கையுடன், அந்த இளம்பெண் ஒருநாள் அவனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஆனால், அங்கே அவருக்காகக் காத்திருந்தது கொடூரமானதொரு சதி. இளம்பெண் தன் வீட்டிற்கு வருவதை முன்கூட்டியே திட்டமிட்ட அந்த காதலன், தனது நண்பர்கள் இருவரையும் வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்துள்ளான். இளம்பெண் வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த 3 பேரும் சேர்ந்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேற்றியுள்ளனர்.
இந்தக் கோரச் செயலால் நிலைகுலைந்து போன அந்த இளம்பெண், தன் தாத்தா மற்றும் பாட்டியின் உதவியுடன் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில், உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இந்தச் செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
