சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்காதவர்களுக்கு “நல்ல சாவே வராது” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பேச்சுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி  பேசிய இசிஆர் சரவணன், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைக் கையாண்டார். பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை மிரட்டும் வகையிலும், சபிப்பது போன்று அவதூறாகப் பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சாடினார்.

மேலும், கடந்த காலங்களைச் சுட்டிக்காட்டிய இசிஆர் சரவணன், மாநகராட்சித் தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் தனது ஒருபக்க மீசையை மழித்துக்கொள்வேன் என்று ஆர்.எஸ்.பாரதி முன்பு சவால் விடுத்திருந்ததை நினைவுக கூர்ந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக தனது பலத்தை நிரூபிக்கும்போது, அந்தச் சவாலை நிறைவேற்ற ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக சவால் விடுத்தார்.

இதற்கிடையில், எதிர்கால அரசியல் கணக்குகளையும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இந்தியாவின் 100-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதும், தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராகத் தளபதி விஜய் தான் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார் என்று தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.