சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாந்தா முருகப்பா தெருவில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, அடிப்படை சுகாதார வசதிகளை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதல்வராகவும் உள்ள விஜய்யின் புதிய தொகுதி அலுவலகம் சமீபத்தில் தான் பெரம்பூரில் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை அவரே நேரில் சென்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இந்நிலையில், தங்கள் பகுதியில் நிலவும் கழிவுநீர் பிரச்சனை குறித்து பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் பகுதிவாசிகள் திரண்டு வந்து எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கழிவுநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.