சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, எப்போதும் பரபரப்பாக இயங்கும் மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் பயணிகளை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திய ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசல் நிறைந்த ரயிலுக்குள் கழுகு ஒன்று கம்பீரமாகப் பறந்து வந்து, பெண் பயணி ஒருவரின் தலைப்பாகை மீது அமைதியாக அமர்ந்திருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜா டெர்மினஸ் – கல்யாண் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயிலில்தான் இந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அக்‌ஷய் பலாவ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

சுதந்திர தினமான அன்று மாலை வழக்கமான கூட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த லோக்கல் ரயிலில், நிஹாங் சீக்கியப் பெண் பயணி ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென ரயிலுக்குள் நுழைந்த ஒரு பருந்து யாருக்கும் எந்தவிதத் தொந்தரவும் தராமல் அந்தப் பெண்ணின் கம்பீரமான தலைப்பாகை மீது மிக அமைதியாக வந்து அமர்ந்துகொண்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay palav♥️ (@aks7715)

சுற்றி நின்ற பயணிகள் யாரும் எதிர்பாராத இந்த அற்புதக் காட்சியைக் கண்டு வியந்துபோயினர். ரயிலில் கழுகு அமர்ந்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்த பலரும், தங்களது செல்போன்களில் இந்தத் தருணத்தை ஆர்வமாகப் பதிவு செய்தனர். சுமார் 40 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ தற்போது 3.74 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களை ஈர்த்துள்ளது.

சீக்கிய மத வரலாற்றில் ‘பாஸ்’  எனப்படும் கழுகு அல்லது பருந்துக்கு மிக முக்கிய இடமும் அரச மரியாதையும் உண்டு. இது வீரம், சுதந்திரம் மற்றும்  கம்பீரமான ஆன்மாவைக் குறிக்கும் சக்திவாய்ந்த அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் ஜி, “வெள்ளைக் கழுகின் எஜமானர்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

சீக்கிய குருக்களின் காலத்தில் கழுகுகளை வளர்ப்பதும் பறக்கவிடுவதும் அரச குடும்பத்தினரின் அடையாளமாக இருந்தது. குரு கோபிந்த் சிங்ஜியின் கழுகுத் தொடர்பு, முகலாயர்களின் ஆட்சிக்கு அடிபணியாமல் ஆன்மீக இறையாண்மையையும் உலகளாவிய பொறுப்பையும் இணைக்கும் தத்துவத்தை விளக்குகிறது. பாரம்பரிய சீக்கியக் கலைகள் மற்றும் நாட்டுப்புற வரலாற்றுகளில், குரு கோபிந்த் சிங்ஜி தனது கையில் வெள்ளை நிறக் கழுகு அமர்ந்திருக்கும் கோலத்தில்தான் பெருமளவில் சித்தரிக்கப்படுவார். காலப்போக்கில், இந்த வடிவம் குருவின் அச்சமற்ற போர்க்குணத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

மும்பை நெரிசல் மிக்க ரயிலில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த நிகழ்வு, பலருக்குச் சீக்கியர்களின் வரலாற்றுச் சின்னமான கழுகின் பாரம்பரியத்தை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாகவும் அமைந்துள்ளது.