மதுரையில் காவல்துறை விசாரணைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கோவில் பூசாரி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பூசாரியைப் போலீசார் தாக்கியதால்தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவரது உறவினர்களும் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் (52), இவர் அந்தப் பகுதியில் உள்ள கோவில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அய்யம்மாளுக்குத் தலையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 19-ஆம் தேதி பரமசிவத்தைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. விசாரணை முடிந்து வீடு திரும்பிய பரமசிவத்திற்குத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை குலைந்த அவரை குடும்பத்தினர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முன்பு பரமசிவம் தன் செல்போனில் பதிவு செய்த வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், “போலீசார் என்னை மிகவும் கடுமையாகத் தாக்கினார்கள்; அதனால் என் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், என்னை அடித்த போலீசார்தான் முழுக்காரணம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கதறி அழுது பேசியுள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அய்யம்மாள் தரப்பில் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்குப் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், பரமசிவத்தின் மரணத்திற்கு காரணமான சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உறவினர்கள் கூறுகையில், “போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது பரமசிவத்தை அவர்கள் கொடூரமாகத் தாக்கினர். ஷூ காலால் அவரது தலையில் கடுமையாக மிதித்துத் தாக்கியதில் அவர் அங்கேயே வாந்தி எடுத்து மயங்கினார். அதன்பிறகு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, நடந்துகொண்ட விசயங்களை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்துக் காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், “போலீசார் தாக்கியதால்தான் பரமசிவம் உயிரிழந்தார் என்பது உண்மையில்லை; அவருக்கு ஏற்கனவே சில உடல்நலப் பாதிப்புகள் இருந்துள்ளன. அவர் இறப்பதற்கு முன்பு எடுத்ததாகக் கூறப்படும் வீடியோக்களை, அவர் இறந்த பின்னர்தான் வெளியிட்டுள்ளனர்.
அவர் இறப்புக்கான உண்மையான மருத்துவக் காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவில்தான் தெரியவரும். மேலும், காவல்துறை அதிகாரிகள் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதால் முறைப்படி ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையின் முழு விவரம் வந்தபிறகே உண்மை வெளிவரும்” என்று தெரிவித்தனர்.
