காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய ஆணை பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மழைநீரை முழுமையாகத் தேக்கி வைக்க முடியாது என்பதால், நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினர். மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி தண்ணீரைப் பங்கீட்டு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீர் குறித்த விவரங்கள் மற்றும் நிலவரம் அடங்கிய துல்லியமான தரவுகளைத் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீர் திறப்பு குறித்த இந்தத் தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அவகாசம் அளித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் முன்னதாக தமிழ்நாட்டிற்கு தினசரி 15 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இந்த உத்தரவு சற்று நிம்மதியை தருவதாக அமைந்துள்ளது.
