பெங்களூருவின் ஒரு பகுதியில் பணியில் இருந்த நயனா என்ற பெண் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், சிலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, உடல்ரீதியாகக் கேலி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஹேமந்த் ரெட்டி, ஹர்ஷித் ரெட்டி, ராகுல் மற்றும் ராதாகிருஷ்ண ரெட்டி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 அன்று ஓரு சந்திப்பு அருகே போக்குவரத்து மேலாண்மைப் பணியில் உதவி ஆய்வாளர் நயனா ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குப் போக்குவரத்து காவலர் மஞ்சுநாத்துடன் சிலர் வாக்குவாதம் செய்வதைக் கண்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த நயனா தலையிட்டபோது இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஹேமந்த் ரெட்டி என்பவர், தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு பெண் அதிகாரியின் கையைப் பிடித்து இழுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நண்பர் ராகுல் என்பவரும் சேர்ந்து அந்தப் பெண் அதிகாரியைத் தாக்கியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு நின்றுவிடாமல், “நீ எருமை மாடு மாதிரி இருக்கிறாய், என்ன சாப்பிடுகிறாய்?” என அந்தப் பெண் அதிகாரியை உடல்ரீதியாகக் கேலி செய்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஹேமந்த் ரெட்டியின் சகோதரர் மற்றும் தந்தையும் சேர்ந்து பெண் அதிகாரியை மிரட்டியதுடன், அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் அதிகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது மற்றும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வைத்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
