காலை வேளையில் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டால், அது பால், செய்தித்தாள் போடுபவராக அல்லது காய்கறி விற்பவராகத்தான் இருக்கும் என்பது நமது வழக்கம். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கதவைத் தட்டி உணவு கேட்கும் ஒரு விசித்திரமான விருந்தாளி வந்து நிற்பதைப் பார்த்து மக்கள் அனைவரும் ஆச்சரியமும் சிரிப்பும் அடைந்துள்ளனர்.
காலை நேரத்தில் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் வரும் பெரிய காளை மாடு ஒன்று வீடுகளின் கதவருகே செல்கிறது. வழக்கமான விலங்குகளைப் போல சும்மா நின்று கொண்டிராமல், அது தன் தலையாலும் நாக்காலும் வீடுகளின் கதவை தட்டி ஒலியெழுப்புகிறது. சத்தம் கேட்டதும் சற்றே பின்னால் நகர்ந்து நின்று கொண்டு, கதவு திறக்கப்படும் வரை மிகவும் அமைதியாகக் காத்திருக்கிறது.
View this post on Instagram
கதவைத் திறந்து வெளியே வரும் மக்களுக்கு அங்கே மனிதர்கள் யாரும் இன்றி ஒரு பிரம்மாண்டமான காளை மாடு நிற்பது பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனாலும், அந்த மாடு எந்தவிதத் தீங்கும் செய்யாமல், மிகவும் சாந்தமாக நின்று தனக்குக் கிடைக்கும் ரொட்டிக்காகக் காத்திருக்கிறது.
அந்தப் பகுதி மக்களும் இந்த மாட்டின் விசித்திரமான பழக்கத்திற்கு இப்போது பழகிவிட்டனர். பல வீடுகளில் இதற்காகவே அதற்குக் கொடுக்கத் தனித்தனியாக உணவை வைத்துக் கொண்டுள்ளனர். தினமும் காலையில் எழுந்து தனக்குத் தெரிந்த வீடுகளுக்கெல்லாம் சென்று கதவை தட்டி உணவைப் பெற்றுச் செல்வதை அந்த மாடு வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சுவாரசியமான வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் பலரும் தங்களது கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர். “மனிதர்களை விட இந்த மாடு மிகவும் புத்திசாலியாக இருக்கிறது” என்றும், “இனிமேல் வீடுகளுக்குத் தபால் அல்லது செய்தித்தாள் போட இந்த மாடே போதும்” என்றும் நெட்டிசன்கள் கலகலப்பாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
