மகாராஷ்டிராவில் இருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தில் நேர்ந்த தொடர் மரணங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சுற்றுலா சென்ற இடத்தில் திடீரெனத் தொழிலதிபர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு மனைவியும் மகனும் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஷால் முகர்ஜி தனது குடும்பத்தினருடன் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நான்கு நாள் சுற்றுலாவாக வாரணாசிக்கு வந்திருந்தார். அங்குள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கங்கையில் புனித நீராடிவிட்டு நகரின் பல பகுதிகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
Pure heartbreak in the city of “Moksha”
A family from Raigad, Maharashtra, came seeking blessings – only to cremated together. Jaya Mukherjee (51) and her son Ishan (26) were found dead in their homestay, just one day after husband and father Vishal Mukherjee (56) breathed his… pic.twitter.com/SU5UBa30c3
— Piyush Rai (@Benarasiyaa) August 16, 2026
அனைவரும் மகிழ்ச்சியாகச் சுற்றுலாவை அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி நள்ளிரவில் விஷால் முகர்ஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவரின் திடீர் மறைவால் நிலைகுலைந்து போன குடும்பத்தினர், மறுநாளே ஹரிச்சந்திரா படித்துறையில் விஷால் முகர்ஜியின் இறுதிச் சடங்குகளைத் தாங்களாகவே முன்னின்று நிறைவேற்றினர். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, விஷால் முகர்ஜியின் மனைவியும் மகனும் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் அறைக் கதவைத் திறக்கவில்லை; உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் சந்தமடைந்த ஹோட்டல் மேலாளர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய் மற்றும் மகன் இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். மேலும், அந்த அறையில் நஞ்சுப்பொருள் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஏடிசிபி கௌரவ் பங்கார் கூறுகையில், விஷால் முகர்ஜியின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட தாங்க முடியாத மனவேதனையின் காரணமாக அவரது மனைவியும் மகனும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது என்றார். இருப்பினும், இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் கோணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பான சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழு உண்மையும் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
