பக்தர்களின் முழக்கங்களால் அதிர்ந்துகொண்டிருந்த அந்தப் புனிதத் தலம், சில நிமிடங்களில் கண்ணீர்க் கடலாக மாறியது. பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அசோக்தாம் சிவன் கோவிலில், ஸ்ராவன் மாதத்தின் மூன்றாம் திங்களான இன்று (ஆகஸ்ட் 17) காலையில் அரங்கேறிய கோரச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது.

புனித ஸ்ராவன் மாதத்தின் மூன்றாம் திங்கள் என்பதால், அதிகாலை முதலே சிவனைத் தரிசித்து ஜல அபிஷேகம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசோக்தாம் கோவிலில் குவிந்திருந்தனர். காலை 6:30 முதல் 6:45 மணிக்குள் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்தனர். அந்தத் திருவிழாக் கோலம், எதிர்பாராத ஒரு விபத்தால் பெரும் சோகமாக மாறியது.

கோவில் வளாகத்திற்கு அருகில் இருந்த மின்சாரக் கம்பம் ஒன்று திடீரெனச் சாய்ந்து, அதிலிருந்த மின்கம்பி அறுந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் விழுந்தது. “கரண்ட் ஷாக் அடித்துவிடும்” என்ற மரண பயம் நொடியில் கூடியிருந்த மக்களைப் பற்றியது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அலறிடித்துக்கொண்டு மக்கள் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கினர்.

 

இந்தத் திடீர் கூட்ட நெரிசலில் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உயிரைப் பிடித்து ஓடிய அச்சத்தால், கீழே விழுந்தவர்கள் மீதே மற்றவர்கள் ஏறி மிதித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அந்த இக்கட்டான நெரிசலில் சிக்கித் திணறினர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் மீட்புப் பணியில் இறங்கினர். கூடுதல் பாதுகாப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு, பதற்றமான சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நெரிசலில் சிக்கிக் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, லஹிசாராய் சர்தார் மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 12 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலரைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கோவில் வளாகம் முழுமையாகக் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.