தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப்போவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது ஆசையைத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரில் நிறைவேற்றி வைத்திருக்கும் சுவாரசியமான தகவல் செம வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்பதாகும். இதன் சுருக்கமான ‘டி.வி.கே.’ என்ற பெயரையே தனது மகனுக்குச் சூட்ட வேண்டும் என எம்.எல்.ஏ பல்லவி பேராவல் கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி கூடிய புதிய தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் பங்கேற்க வந்த பல்லவி, இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்குத் தனது கைக் குழந்தையுடன் வந்துள்ளார். சட்டசபை கூட்டம் முடிந்து முதலமைச்சர் விஜய் வீட்டிற்குப் புறப்பட்ட நேரத்தில், பல்லவி தனது குழந்தையுடன் அவரை நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது, அந்தக் கியூட் குழந்தையைத் தனது கைகளில் வாங்கி ஆசையோடு உச்சிமுகர்ந்த முதலமைச்சர் விஜய், குழந்தைக்கு ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என்று  பெயர் சூட்டி அசத்தியுள்ளார். இந்தப் பெயரின் சுருக்கமும் ‘டி.வி.கே.’ (T-Tamil, V-Vetri, K-Kondan) என்று வருவதால், தனது மகனுக்குக் கட்சியின் பெயரிலும், தளபதியின் சினிமா கேரக்டர் பெயரிலும் ‘டி.வி.கே.’ எனப் பெயர் வைக்க வேண்டும் என்ற பெண் எம்.எல்.ஏ பல்லவியின் நீண்ட நாள் ஆசை தற்போது முதலமைச்சர் விஜய்யால் பாசத்தோடு நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் பச்சிளம் குழந்தையைக் கொஞ்சிப் பெயர் சூட்டிய இந்த நெகிழ்ச்சியான விபரம் தற்போது சோசியல் மீடியாவில் தவெக தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்களால் பயங்கர மிரட்டலாகக் கொண்டாடப்பட்டு, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.