மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை வைத்துப் போலி நீட் தேர்வு வினாத்தாள்களை உருவாக்கி, அதை இன்ஸ்டாகிராம் மூலம் மாணவர்களுக்கு விற்று மோசடி செய்த சட்டக் கல்லூரி மாணவன் ஒருவன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தூரின் லசூடியா பகுதியைச் சேர்ந்த அக்ஷய் மாளவியா என்ற முதலாண்டு சட்டக் கல்லூரி மாணவன், நீட் தேர்வு வினாத்தாள்களைத் தேர்வுக்கு முன்பே தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் போலி விளம்பரங்களை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி அவரது புரொபைலில் இருந்த லிங்க் மூலம் சுமார் 20 முதல் 22 மாணவர்கள் வரை யூபிஐ (UPI) உள்ளிட்ட ஆன்லைன் முறைகளில் ₹50 முதல் ₹100 ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளனர்.

ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில், அந்த மாணவன் பழைய வினாத்தாள்கள் மற்றும் ஸ்டடி மெட்டீரியல்களை ஏஐ (AI) டூல்ஸ் மூலம் எடிட் செய்து, புதிய நீட் பேப்பர் போல ஏமாற்றி விற்றது அம்பலமானது. கோட்டா போலீசாரின் ரகசியத் தகவலின் பேரில் சனிக்கிழமை இரவு இந்தூர் க்ரைம் பிராஞ்ச் சிறப்பு விசாரணைக் குழுவினர் (SIT) பாய்ந்து சென்று அந்தப் போலி பேப்பர் மாஃபியா ஆசாமியைக் கம்பி எண்ண வைத்துள்ளனர்.

ஏற்கனவே நீட் தேர்வு ரத்து சர்ச்சையின் போது இது போன்ற போலிப் பதிவுகளைப் பகிர்ந்ததால் சைபர் போலீசாரின் கண்காணிப்பில் இருந்த அக்ஷய் மீது தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூதன ஏஐ மோசடிப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்று போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வரும் இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் நெட்டிசன்களிடையே செம வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.