கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு முதன்முறையாக வந்த இரு கிராமத்து சிறுவர்களை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிரட்டி, காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று பணம் பறித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த ஐடி (IT) நகரத்தையும் அதிர வைத்துள்ளது.

சானு (Sanu) என்ற எக்ஸ் (ட்விட்டர்) பயனர், “பெங்களூரு ஆட்டோக்காரர்கள் அப்பாவி மக்களிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்!” என்று ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். சர் எம் விஸ்வேஸ்வரய்யா முனையத்திற்கு (Sir M Visvesvaraya Terminal) முதன்முறையாக வந்த இரு கிராமத்து சிறுவர்களைத் தனது ஆட்டோவில் ஏற்றிய ஓட்டுநர், அவர்களிடம் சவாரி கட்டணமாக ₹3,000 கேட்டு மிரட்டியுள்ளார்.

சிறுவர்கள் அவ்வளவு பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய தனிமையான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, மிரட்டிப் பணிய வைத்து அவர்களிடம் இருந்து ₹2,400 ரூபாயைப் பறித்துக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் கடுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “இது இந்த ஐடி நகரத்திற்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானம்; பிழைப்பு தேடி புதிய நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்த உடனேயே இப்படிப் பகல் கொள்ளையடிக்கப்பட்டால் அந்த சிறுவர்களின் மனநிலை என்னவாகும்?” என்றும், “டெல்லியை விட பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் மோசமாக நடந்துகொள்கிறார்கள், சாலை இவர்களுக்கே சொந்தம் என்பது போல் அராஜகம் செய்கிறார்கள்” என்றும் இணையவாசிகள் தங்களது குமுறல்களைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் இப்படி இருப்பதில்லை என்றாலும், நகரின் பெயரைத் கெடுக்கும் இது போன்ற குற்றவாளிகளைக் காவல் துறை உடனடியாகக் கைது செய்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.