தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கட்கேசர் பகுதியில் காதலித்த பெண்ணைப் பழிவாங்க அவருக்கு எய்ட்ஸ் பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் என்ற அந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.
ஆனால், மனோகர் மற்றும் அவரது பெற்றோருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை அறிந்த பெண் வீட்டார் இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மனோகர், மார்ச் 11 அன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தன்னிடம் இருந்த எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் அந்தப் பெண்ணின் உடலில் வலுக்கட்டாயமாகச் செலுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, தற்போது அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தலைமறைவாக இருந்த மனோகரை மார்ச் 14 சனிக்கிழமை அன்று போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பழிவாங்கும் எண்ணத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையையே சீரழித்த இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
