தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் கொலைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் பல ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விளாத்திகுளம் சிறுமி கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் வெளியிடுவதில் மட்டுமே குறியாக இருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் போதிய கட்டிட வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்குத் தரமற்ற உணவும், அழுகிய முட்டைகளும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களுக்குக் கல்வி கற்கத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பள்ளிகள் வரை ஊடுருவியுள்ள கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், விளம்பரத்திற்காக மாணவர்களைப் பயன்படுத்துவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.