சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தமிழக அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தான் திமுகவின் ‘கட்டப்பா’ என்று தன்னை வர்ணித்துக் கொண்ட அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் அந்த இயக்கத்திற்கு எப்போதும் ஆதரவாகவே இருப்பேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒட்டிக் கொள்பவன் தான் அல்ல என்றும், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் காலத்திலும் தான் அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்களைக் கடுமையாகச் சாடிய சத்யராஜ், மக்கள் ஏதோ மாற்றம் ஏற்படும் என்று அவசரப்பட்டு ஓட்டு போட்டு ஏமாந்துவிட்டதாகக் கருத்து தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை, ஆட்சியாளர்கள் திட்டத்தின் பெயரை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் திட்டங்களை மட்டும் மாற்றிவிடாதீர்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், “நாம் வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ கொடி பறக்கிறதே” என்று கூறிய அவர், அந்த மாற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
திமுக என்பது தேர்தலில் போட்டியிட உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல, அது சமூக சேவைக்காகத் தொடங்கப்பட்ட ஒரு வலிமையான அமைப்பு என்று சத்யராஜ் புகழ்ந்துரைத்தார்.
பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களே சிறந்த அரசியல் தலைவர்கள் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சிக்குத் திமுகவின் செயல்பாடுகளே அடிப்படை என்றும், தற்போதைய அரசு திமுக வகுத்த பாதையில் செல்வதே நாட்டுக்கு நல்லது என்றும் அறிவுறுத்தினார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் கலந்துகொண்ட சத்யராஜ், தனது தம்பி மா.சுப்பிரமணியன் தான் என்றும் குறிப்பிட்டு உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
