ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் உள்ள டோடா ராய்சிங் பகுதியில் உள்ள மதுக்கடைக்குள் நேற்று திங்கட்கிழமை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வெளியே அமர்ந்திருந்த ஃபதே லால் கோலி (40) என்ற நபர் மீது முதலில் தாக்கிய அந்த சிறுத்தை, பின்னர் கடைக்குள் புகுந்து அங்கு பணியிலிருந்த சஞ்சய் குர்ஜார் (25) என்ற விற்பனையாளரையும் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, விற்பனையாளர் அந்த சிறுத்தையிடமிருந்து தப்பித்து கடையை விட்டு வெளியேறினார். காயமடைந்த இருவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிறுத்தை மதுக்கடைக்குள் புகுந்த இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, அதில் அந்த விலங்கு மது பாட்டில்களைச் சிதறடிக்கும் காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் வகையில் உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர், ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் நான்கு முதல் ஐந்து வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சிறுத்தையை, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மதியம் 1:15 மணியளவில் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பாதுகாப்பாகக் கைப்பற்றினர்.

மதுக்கடைக்குள் சிறுத்தை புகுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து மதுக்கடைக்கு வெளியே திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சிறுத்தை தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. வனத்துறையின் உரிய நடவடிக்கையால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டாலும், குடியிருப்பு பகுதிக்கு அருகில் சிறுத்தை வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.