ஆசிரியர்கள் வகுப்பறையில் புத்தக அறிவை மட்டும் போதிப்பதில்லை; மாறாக, பல நேரங்களில் தங்களின் மாணவர்களுக்குப் பெற்ற தாயாகவும், தந்தையாகவும் நின்று அரவணைக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரத்தைப் பள்ளியிலேயே கழிப்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆசிரியர்களின் தலையாய கடமையாகிறது. ஆபத்தான சூழல்களில் ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் தனது மாணவர்களைப் பற்றியே யோசிப்பார் என்பதற்குச் சான்றாக இணையத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது.
நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ‘ஸ்ரீ ராமசரண் பள்ளி’யில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கே திடீரெனப் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளியின் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்தது. கூரையின் வழியே மழைநீர் கொட்டத் தொடங்கியதால் வகுப்பறை முழுவதும் நீர் பரவி குழந்தைகள் பயந்து நடுங்கினர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிறிதும் தாமதிக்காத ஆசிரியர், மழைநீரில் நனையாமல் இருக்கக் குழந்தைகள் அனைவரையும் டெஸ்குகளுக்கு அடியில் அமருமாறு கேட்டுக்கொண்டார்.
View this post on Instagram
வைரலாகும் அந்த வீடியோவில், ஆசிரியர் தற்காலிகமாகப் பாய்களைக் கொண்டு குழந்தைகளைப் போர்த்தி மறைப்பதும், மழைநீர் நேரடியாகக் குழந்தைகள் மீது விழாதவாறு மேஜைகளைப் பிடித்துக்கொண்டு நிற்பதும் பதிவாகியுள்ளது. இந்த முயற்சியில் அந்த ஆசிரியர் மழைநீரில் முழுமையாக நனைந்துபோனார். இருப்பினும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், தன் மாணவர்களில் ஒருவருக்குக் கூட ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே அவர் தீவிரமாகச் செயல்பட்டார். ஆசிரியரின் இந்த அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வு அனைவரின் நெஞ்சத்தையும் உருக வைத்துள்ளது.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “இவர்தான் உண்மையான ஹீரோ”, “குழந்தைகளுக்காகத் தான் நனைவதைப் பற்றி யோசிக்காத இந்த அன்பிற்கு ஈடு இணையே இல்லை” எனப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், நேபாளப் பள்ளியின் அவலநிலையைக் சுட்டிக்காட்டி அரசு நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்து நேரத்தில் தன் உயிரைப் பற்றி யோசிக்காமல் மாணவர்களைக் காத்த இந்த ஆசிரியரின் செயல், “ஆசிரியர் என்பவர் இரண்டாவது பெற்றோர்” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
