மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் பஜாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோமல் யோகேஷ் மோரே என்ற பட்டதாரி பெண், கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு கணினி பொறியாளரான யோகேஷ் மோரே என்பவருடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணமான புதிதில் வாழ்க்கை சுமுகமாகச் சென்றபோதிலும், நாளடைவில் கணவர், மாமனார் ரேவ்நாத் மோரே, மாமியார் காந்தா மோரே மற்றும் மைத்துனர் சச்சின் மோரே ஆகியோர் கோமலுக்குத் தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடும் சித்திரவதைகளை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அதிகாலை 5:30 மணியளவில் கோமலின் மாமனார், அவரது தந்தையைத் தொடர்புகொண்டு “கோமல் சுயநினைவின்றி கிடக்கிறாள், எழவே இல்லை” எனக் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த கோமலின் சகோதரர் டாக்டர் கிருஷ்ணா பவார் மற்றும் அவரது தந்தை உடனடியாக வீட்டிற்கு விரைந்தனர்.

வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, கோமல் தனது அறையில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் மற்றும் துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், இது சாதாரண தற்கொலை அல்ல, கணவர் வீட்டாரின் கொடுமையால் நேர்ந்த படுகொலை என்றும், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளனர் என்றும் கோமலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இச்சம்பவத்தில் தாயைப் பிரிந்து தவிக்கும் 8 வயது மற்றும் இரண்டரை வயதான இரு சிறு குழந்தைகள், எதுவும் அறியாமல் தங்கள் தாயைத் தேடி அழுது புலம்பிய காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

இச்சம்பவம் தொடர்பாக கோமலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், வால்யூஜ் காவல்துறையினர் கணவர் யோகேஷ் உட்பட குடும்பத்தினர் நால்வர் மீது குடும்ப வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.