இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் கொசுக்களால் பரவி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் கொடூரமான டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

​ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கியூடெங்கா’ (Qdenga) என்ற டெங்கு தடுப்பூசியை இந்தியச் சந்தையில் விற்பனை செய்யவும், பொதுமக்களுக்குப் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதி, நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

​இந்த ‘கியூடெங்கா’ தடுப்பூசியானது 4 வயது சிறுவர்கள் முதல் 60 வயதுடைய பெரியவர்கள் வரை உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காகப் பரிந்துரைக்கப்படுகிறது. உயிரைப் பறிக்கும் ஆபத்தான டெங்கு வைரஸ் பாதிப்பில் இருந்து மனித உடலைப் பாதுகாப்பதில் இந்தத் தடுப்பூசி மிகச் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

​நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசின் இந்த அதிரடி ஒப்புதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விரையில் இந்தத் தடுப்பூசி நாட்டின் அனைத்து முன்னணி மருத்துவமனைகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.