ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இவரது மூத்த மகள் ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (21) என்ற இளைஞர், இந்தப் பள்ளி மாணவியை கடந்த சில நாட்களாகக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, இதுகுறித்து தனது தந்தை மாரியப்பனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாரியப்பன், முனியராஜ் வீட்டிற்குச் சென்று அந்த இளைஞரைக் கண்டித்துள்ளார். இருப்பினும், மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் முனியராஜ், பள்ளி சென்ற மாணவியைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த துறைமுக காவல் நிலையப் போலீசார், உடனடியாக அங்கு வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர் முனியராஜையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
