உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஹாதி கிராமத்தில், விவசாயி ஹர்மோகன் யாதவ் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு தனது தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். சம்பவத்தன்று இரவு அவர் தனது நண்பர்களான அர்ஜுன், முலாயம் மற்றும் ஷியாம் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை ஹர்மோகன் கொலை செய்யப்பட்டு கிடந்ததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அந்த மூன்று நண்பர்கள் மீதுதான் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் முதற்கட்டமாக அந்த நண்பர்களைக் கைது செய்து விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால், இந்த வழக்கைக் கையில் எடுத்த ஏசிபி அசுதோஷ் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், கதையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு, ஹர்மோகனின் பக்கத்துத் தோட்டத்து உரிமையாளரான தர்மேந்திர யாதவ் என்பவரும் திடீரென காணாமல் போயிருந்ததும், மறுநாள் காலையில் அவரது கையில் காயங்கள் இருந்ததும் போலீசாருக்குத் தெரியவந்தது. மேலும், கொலையாளி யார் என்று யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தர்மேந்திரா காலையில் ஹர்மோகனின் இறுதி ஊர்வலத்திலும், மயானம் வரை கூடவே சென்று நாடகமாடியுள்ளார். பின்னர் அடுத்த நாளே தனது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குத் தப்பியோடியது போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இதனையடுத்து, மாமனார் வீட்டில் பதுங்கியிருந்த தர்மேந்திராவை போலீசார் கைது செய்து பாணியில் விசாரித்தபோது, கொலைக்கான உண்மையான காரணம் வெளிவந்தது. சில வாரங்களுக்கு முன்பு, ஹர்மோகன் கிராமத்து பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததை தர்மேந்திரா நேரில் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்மோகன், தர்மேந்திரா தன் மீது ஊருக்குள் அவதூறு பரப்பி விடுவாரோ என்ற பயத்தில், தர்மேந்திரா மீது ₹900 திருடியதாகப் பொய் பழி சுமத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது மண்வெட்டி மற்றும் கோடாரியையும் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்து, ஊர் முழுவதும் தர்மேந்திராவை திருடன் என அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்கக் காத்திருந்த தர்மேந்திராவிற்கு புதன்கிழமை இரவு ஒரு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹர்மோகன் தனது நண்பர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு தூங்கியதைப் பார்த்த தர்மேந்திரா, பழிவாங்க இதுவே சரியான நேரம் என முடிவு செய்தார். ஏனெனில், கொலை செய்தால் பழி நண்பர்கள் மீதுதான் விழும் என அவர் கணக்கு போட்டார். அதன்படி, ஹர்மோகன் தூங்கிய பிறகு, தடியால் தலையில் அடித்து, பின்னர் மண்வெட்டியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து அசல் கொலையாளி தர்மேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொலைக்குக் காரணமான மண்வெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமத்தப்பட்ட மூன்று நண்பர்களும் இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
