வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரைப் போர்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நியூயார்க் நகரச் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அந்த நகரத்தின் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த அறிவிப்பு, சர்வதேச அளவிலும் உற்றுநோக்கப்படுகிறது.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழுக்கு சனிக்கிழமை அளித்த பிரத்யேக பேட்டியில் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தி வரும் மனிதநேயமற்ற தாக்குதல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவிற்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நெதன்யாகு சர்வதேச சட்டங்களின்படி தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும், அவர் இருக்க வேண்டிய இடம் சர்வதேச நீதிமன்றம் தான் என்றும் மம்தானி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜோஹ்ரான் மம்தானி தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நெதன்யாகுவை நியூயார்க்கிற்குள் கால் வைக்க விடாமல் கைது செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஜனநாயக சோசலிசவாதியான இவர் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். “நியூயார்க் நகரச் சட்டங்கள் எனக்கு என்ன அதிகாரங்களை வழங்குகிறதோ, அதன் அடிப்படையில் மட்டுமே நாங்கள் செயல்படுவோம்; சட்டத்தை மீறி நாங்களாக எந்தப் புதிய விதிகளையும் உருவாக்க மாட்டோம். ஆனால், சட்டம் அனுமதித்தால் நெதன்யாகு நிச்சயம் நியூயார்க்கில் கைது செய்யப்படுவார்” என்று அவர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

நியூயார்க் மேயரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டபோது, “மம்தானி ரகசியமாக அமெரிக்காவை வெறுக்கிறார்” என்று சாடினார். அதேபோல, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானோன், இதுபோன்ற அச்சுறுத்தல்களையும் மீறி செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் நெதன்யாகு நிச்சயமாகப் பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆளும் ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேலுக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருவதையே நியூயார்க் மேயரின் இந்த அதிரடி நடவடிக்கை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.