ஹைதராபாத்தில் 25 வயதுடைய மென்பொருள் பொறியாளர் ஒருவர், நள்ளிரவில் ஆடைகளின்றி ஓடிச் சென்று கோயில் குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் பணிபுரிந்து வந்த தேஜஸ்வினி, கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனது தாயை அறையினுள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியேறிய அவர், நிர்வாணமாகச் சாலைகளில் நடந்து சென்று கோயில் குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் காலை கதவைத் திறக்க முடியாமல் தவித்த தாயார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடியபோது குளத்தில் மகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட சில விஷயங்களை நினைத்து அவர் மிகுந்த பயத்திலும் மன அழுத்தத்திலும் இருந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் யாருக்கும் தொடர்பில்லை என்று காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாக மேடிபள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.