கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு வருகை தந்த அல்ஜீரிய-பிரெஞ்ச் சமூக வலைதளப் பிரபலமான ‘ரிமா’, அங்குள்ள கலாசார விதிமுறைகளுக்கு மாறாக ஆபாசமான ஆடைகளுடன் உடலைக் காட்டி வீடியோக்களைப் பதிவிட்டதால், கத்தார் அதிகாரிகளால் உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளார். கத்தாரின் பொது ஒழுக்க விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோஹாவிற்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே ரிமா, தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரைகுறை ஆடைகளுடன் கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தச் சமயத்தில் கத்தார் நாடு அதிகாரப்பூர்வ துக்க ஆசரிப்பில் இருந்தபோது, நாட்டின் கலாசாரத்திற்கு மதிப்பளிக்காமல் அவர் இத்தகைய வீடியோக்களை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்த கத்தார் அதிகாரிகள், இரு நாட்கள் விசாரணைக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட ரிமா, தான் 2 நாட்கள் காவலில் வைக்கப்பட்டதை உறுதி செய்ததுடன், தனது நாடு கடத்தல் ஆவணத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில் பேசும்போது, “நான் ஒரு முஸ்லிம் என்றாலும், இஸ்லாமிய வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றத் தவறிவிட்டேன். எதிர்காலத்தில் எனது நம்பிக்கையை உறுதியாகப் பின்பற்றி மீண்டும் கத்தாருக்குத் திரும்புவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியக் கலாசாரத்தையும் பொது அமைதியையும் தீவிரமாகப் பின்பற்றும் கத்தார் அரசின் இந்த நடவடிக்கை, தற்போது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.