சீனாவில் பெய்து வரும் மிகக் கடுமையான கணமழை மற்றும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பெருவெள்ளத்துக்கு மத்தியில், பெற்றோர் மீதான பாசத்திற்காக வாலிபர் ஒருவர் செய்துள்ள வீரச் செயல் ஒட்டுமொத்த உலகையுமே வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷியே (Xie) என்ற வாலிபரின் கிராமத்தைச் சுற்றி திடீரெனப் பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கு வசித்து வந்த தனது வயதான பெற்றோரை அவரால் தொலைபேசி மற்றும் எந்தவொரு தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியாத அசாத்தியமான சூழ்நிலை உருவானது.

​கனமழையின் காரணமாக ஒட்டுமொத்த சிக்னல் மற்றும் மின்சார இணைப்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், வெள்ளத்தில் சிக்கிய தனது பெற்றோர் தற்போதைய நிலையில் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் ஷியே தவித்துப் போயுள்ளார். நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த வாலிபர், அதிகாரிகளின் மீட்புப் படைக்காகக் காத்திராமல் ஒரு நொடி கூடத் தாமதிக்கக் கூடாது என்ற நோக்கில், தன் பெற்றோரின் உயிரை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற அதிரடி முடிவை எடுத்தார்.

​சுற்றி வளைத்து ஆர்ப்பரித்து வந்த காட்டு வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், ஒரு காரின் பழைய டயரை மட்டுமே தனக்கு உதவியாக எடுத்துக்கொண்டு, சீறிப்பாய்ந்த வெள்ள நீரில் தன் உயிரைப் பணையம் வைத்துத் துணிச்சலாகக் குதித்து நீந்தத் தொடங்கினார். சுமார் 3 மணி நேரம் உயிருக்குப் போராடி, மரண பயத்தைக் காட்டி சீறியடித்த வெள்ள நீரை எதிர்த்துப் போராடி நீந்தியபடியே ஒரு வழியாகத் தனது கிராமத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

​மரணப் போராட்டத்திற்குப் பிறகு ஷியே தனது வீட்டை அடைந்தபோது, அங்கு வீட்டின் முதல் மாடி வரை வெள்ள நீர் முழுமையாகச் சூழ்ந்து, அவரது பெற்றோர் மாடியில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்றும் பதற்றமடையாமல், டயரின் உதவியோடு தனது பெற்றோர் இருவரையும் அந்தப் பெருவெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்ட ஷியே, அவர்களை அந்தப் பகுதியிலுள்ள உயரமான மலை மேல் இருக்கும் ஒரு பாதுகாப்பான வீட்டில் கொண்டு போய் பத்திரமாகத் தங்க வைத்துள்ளார்.

​பெற்றோரின் உயிரைக் காக்க 3 மணி நேரம் வெள்ளத்தில் நீந்தி வந்த மகனின் இந்த அசாத்தியமான பாசப் போராட்டம் மற்றும் சாகசச் செய்திகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் பாராட்டுகளையும் இதயங்களையும் அள்ளி வருகிறது. ஆபத்துக் காலத்தில் துணிச்சலாகச் செயல்பட்டுப் பெற்றோரை மீட்ட இந்தச் சீன வாலிபரின் செயல், இக்காலத் தலைமுறைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.