உலகில் விசித்திரமான சம்பவங்களுக்கும், வித்தியாசமான ஐடியாக்களுக்கும் பஞ்சமே இல்லாத நாடு ஜப்பான். அந்த வகையில், தற்போது ஒட்டுமொத்த உலகையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு அதிரடி ஆஃபர் ஜப்பானில் உலா வந்து கொண்டிருக்கிறது. “நீங்க தங்குவீங்களாங்க இந்த வீட்ல?” என்று கேட்கும் அளவுக்கு, பேய் இருப்பதாக உள்ளூர் மக்களால் பயத்துடனும் பீதியுடனும் நம்பப்படும் வீடுகளில் ஒரே ஒரு இரவு மட்டும் தங்கினால், இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000 சம்பளமாக அள்ளிக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

​இந்த விசித்திரமான வேலைக்கு பின்னணியில் ஒரு சோகமான மற்றும் எதார்த்தமான காரணமும் ஒளிந்துள்ளது. ஜப்பானில் தனியாக வசிப்பவர்கள் திடீரென இறந்து போவது, கொடூரமான தீ விபத்துகளில் வீடுகள் சிக்குவது அல்லது தற்கொலை போன்ற காரணங்களால் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் நடக்கும் வீடுகளை, அங்குள்ள மக்கள் ‘சகுனம் இல்லாத வீடு’ அல்லது ‘பேய் வீடு’ என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுகின்றனர். இதன் காரணமாக, பல ஆண்டுகளாக யாரும் தங்காமல் பாழடைந்து கிடக்கும் இந்த வீடுகளை விற்பனை செய்வதற்காக, அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தற்போது இந்த அதிரடி மாஸ்டர் பிளானைக் கையில் எடுத்துள்ளனர்.

​இந்த வேலைக்குத் தேர்வாகி அந்த வீட்டில் தங்குபவர்களுக்கு ஒரு முக்கிய நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. சும்மா போய் தூங்கிவிட்டு வர முடியாது; அங்கு ஒரு இரவு முழுவதும் தங்கிய பிறகு, “இந்த வீட்டில் எந்தப் பேயோ, பிசாசோ அல்லது அமானுஷ்ய சக்திகளோ இல்லை” என்பதை முறைப்படி நிரூபித்து, அதற்கான சான்றிதழை (Certificate) வீட்டின் உரிமையாளரிடம் அளிக்க வேண்டும். இந்தச் சான்றிதழை வச்சு, வீட்டின் மீது இருக்கும் பேய் பயத்தை மக்கள் மத்தியில் இருந்து நீக்கி, அதை நல்ல விலைக்கு விற்பனை செய்ய உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

​உயிருக்குத் துணிந்து, ஒரு இரவு பயத்தை அடக்கிக் கொண்டு தங்கினால் கைநிறைய ரூ.52,000 சம்பளம் கிடைக்கும் என்பதால், ஜப்பானில் இருக்கும் தைரியசாலி இளைஞர்கள் பலர் இந்த விசித்திரமான வேலைக்கு போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரோ, “ரூ.52,000-க்காக பேய் கூட எல்லாம் குடித்தனம் நடத்த முடியாது சாமி!” என்று இந்த நியூஸை சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து விவாதித்து வருகின்றனர்.