2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நியூயார்க் நியூஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், கூடுதல் நேரத்தில் ஃபெரன் டோரஸ் அடித்த ஒரு கோல் ஸ்பெயினுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடித்தந்தது. இருப்பினும், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
போட்டியின் நடுவே நிலவிய பதற்றம், ஆட்டம் முடிந்ததும் வன்முறையாக வெடித்தது. ஸ்பெயின் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியபோது, அர்ஜென்டினாவின் நஹுயல் மொலினா, ஸ்பெயின் கேப்டன் ரோட்ரியைத் தாக்கும் வகையில் கை நீட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அர்ஜென்டினாவின் லியான்ட்ரோ பரேடஸ் திடீரெனப் பாய்ந்து வந்து ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியுள்ளார்.
Massive fight at the end of the game as Paredes was seen getting physical.
Argentina coach had to separate and few others #WorldCup #Spain #Messi #ArgentinaVsEspaña #EspañaArgentina pic.twitter.com/jYNSkvZuec
— Ultimateinvest (@UPlays1051) July 19, 2026
அதோடு நிறுத்தாமல், ஸ்பெயினின் இளம் வீரர் காவியையும் கீழே தள்ளி, அவரது ஜெர்சியைப் பிடித்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார். இந்த அராஜகமான செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடுவர் சிலாவ் கோ வின்சிச், போட்டி முடிந்த பிறகும் பரேடஸுக்கு உடனடியாக ‘ரெட் கார்டு’ காண்பித்து மைதானத்தை விட்டு வெளியேற்றினார். முன்னதாக, போட்டியின் போது அர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டஸும் ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினா வீரர்களின் இந்த முரட்டுத்தனமான நடத்தையை இங்கிலாந்து முன்னாள் வீரர்களான கேரி நெவில் மற்றும் ஆலன் ஷீரர் ஆகியோர் கடுமையாகச் சாடியுள்ளனர். “தோல்வியைக் கண்ணியமாக ஒப்புக்கொள்ள வேண்டும்; பரேடஸின் இந்தச் செயல் கால்பந்து விளையாட்டுக்கே அவமானம்” என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பையாகக் கருதப்படும் இந்தப் போட்டி, அர்ஜென்டினா வீரர்களின் இத்தகைய செயலால் கவலையுடன் கூடிய கசப்பான அனுபவமாக முடிவுக்கு வந்துள்ளது.
