2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளனரா என்பதை பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் மிகச் சிறந்த நட்சத்திர வீரர்களுக்குத் தங்களின் எதிர்காலம் குறித்த தெளிவான விடை கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின் போது பேசிய யுவராஜ் சிங், ரோஹித் மற்றும் விராட்டின் எதிர்காலம் குறித்து நிலவும் குழப்பத்தைப் பார்க்கும்போது தனது சர்வதேச வாழ்க்கையின் கடைசி நாட்கள் நினைவுக்கு வருவதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். “அந்த சமயத்தில் அணியில் எனது பங்கு என்ன என்பது குறித்து எனக்கு எந்தத் தெளிவும் அளிக்கப்படவில்லை; நானும் இருளில்தான் வைக்கப்பட்டிருந்தேன்” என்று தனது கசப்பான அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று ரோஹித்தும் விராட்டும் இருக்கும் நிலையில் தான் ஒரு காலத்தில் நானும் இருந்தேன். எனவே அவர்கள் விளையாட வேண்டுமா வேண்டாமா என்பதை வெளியில் இருந்து நாம் தீர்மானிக்க முடியாது. இது அணி நிர்வாகம், தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு எடுக்க வேண்டிய முடிவு. 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழு விரும்பினால், அவர்களின் தோளில் கை போட்டு, ‘2027 உலகக் கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என விரும்புகிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம். ஒரு தொடர் சரியாக அமையாவிட்டால் இடம் பறிபோய்விடுமோ என்ற பயம் இல்லாமல் வழக்கம் போல் விளையாடுங்கள்’ என்று தைரியம் சொல்ல வேண்டும்” என்றார்.
மேலும், “தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் அல்லது தேர்வுக்குழு… முடிவு யாராக இருந்தாலும் அதை வீரரிடம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். எனது சர்வதேச வாழ்க்கையின் இறுதியில் எனக்கு அந்தத் தெளிவு கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடிய ஒரு வீரருக்கு அது நியாயமான செயல் அல்ல. ஒரு வீரர் உங்களது எதிர்காலத் திட்டத்தில் இல்லை என்றால், அதை அவர்களிடம் நேருக்கு நேர் சொல்லிவிட வேண்டும். அந்த முடிவு கடினமானதாக இருக்கலாம், வெளியில் இருப்பவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அந்த வீரருக்கு உண்மையைக் கூறிவிட்டோம் என்ற திருப்தியாவது மிஞ்சும்” என்று யுவராஜ் சிங் கூறினார்.
