தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகியாலேயே பெட்ரோல் ஊற்றி எாித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 26 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த ஏ. மகேஷ் (52) என்பவரே கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு கோட்டிலிங்கலா கோயில் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. ஜன்னு மது என்ற சக காங்கிரஸ் தொண்டர், மகேஷை ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு விருந்துக்காக அழைத்துள்ளார். அங்கு மற்றொரு தொண்டரான பத்ரி குமார் மற்றும் ஒரு நபர் வந்துள்ளனர். அப்போது, ரவுடிப் பட்டியலிலுள்ள பத்ரி குமார், தன் பற்றிய தகவல்களை எம்.எல்.ஏ கே.ஆர். நாகராஜுவிடம் மகேஷ் போட்டுக்கொடுப்பதாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
A Congress worker was set a blaze by a rowdysheeter in Warangal district on Saturday, July 18, over an alleged dispute.
The incident occurred in Kotilingala village, Geesugonda mandal, Vardhannapet constituency. When the victim, Adepu Mahesh was reportedly called by a fellow… pic.twitter.com/5hdvSb6fNI
— The Siasat Daily (@TheSiasatDaily) July 19, 2026
வாக்குவாதம் முற்றிய நிலையில், பத்ரி குமார் மகேஷின் செல்போனைப் பறித்துக்கொண்டு, அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். மகேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், தீயை அணைத்தனர். அப்போது, மக்கள் தன் போனில் பதிவு செய்த மரண வாக்குமூலத்தில், பத்ரி குமாரே தன் மீது தீ வைத்ததாக மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார். மேலும், கட்சி வளர்ச்சிக்கு உழைத்த தன்னை போன்ற மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகச் சிலர் சதி செய்வதாகவும், தன் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள பத்ரி குமார் ஏற்கனவே 2018 கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
