மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஞ்சலக பெண் ஊழியர் ஊர்மிளா சைனி கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கணவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வழக்கு புதிய திருப்பத்தை பெற்றுள்ள நிலையில், ஒரே வாரத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து இரு சிறு குழந்தைகள் நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.

இந்தூரில் உள்ள அஞ்சலக குடியிருப்பில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி ஊர்மிளா சைனி என்ற பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கணவர் அகிலேஷ் சைனிக்கு மனைவி மீது இருந்த சந்தேகமே இந்த கொலைக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஊர்மிளாவின் தலையில் பலமாகத் தாக்கி, தாடையை உடைத்துக் கொடூரமாகக் கொலை செய்த அகிலேஷ், அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வீட்டின் தொலைக்காட்சியை அதிக சத்தத்தில் ஓடவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறு குழந்தைகள், தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தனர். தப்பியோடிய அகிலேஷின் செல்போன் வீட்டிலேயே இருந்ததால், அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலிஸார், அவனைக் கைது செய்ய ரூ. 20,000 வெகுமதி அறிவித்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அகிலேஷின் சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர். மனைவியைக் கொடூரமாகக் கொன்ற குற்ற உணர்ச்சியிலும் போலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்கவும் அவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் தாய் தந்தை இருவரையுமே இழந்து தற்போது குழந்தைகள் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.