நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்றுத் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் சோனம் வாங்சுக்கை, நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்து விட்டது.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப் போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்குப் போலீசார் திடீரெனத் தடை விதித்து அப்பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சியினர் மீது போலீசார் வழுக்கட்டாயமாக தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக், அங்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுத்துத் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். அதோடு, போலீசாரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, ஒரு துண்டுச் சீட்டில் தான் எழுதிய ரகசியக் கடிதம் ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமானால் மத்திய அரசு தனது மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வி அமைப்பில் நடந்துள்ள தோல்விகளுக்கும் வினாத்தாள் கசிவுக்கும் அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்; அல்லது நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று அனைத்துக் கட்சி தலைவர்களிடம் மனு அளிக்க அனுமதித்து, அவர்கள் இதனை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளிக்க வேண்டும்; அல்லது தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எம்பிக்களே மருத்துவமனைக்கு வந்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகள் ஆகும். “இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால் இதில் ஒன்றை அரசு ஏற்றால் மட்டுமே உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன்” என்று கூறியுள்ள அவர், பேச்சுரிமை பறிக்கப்பட்டு மருத்துவமனையில் தான் ‘சட்டவிரோத காவலில்’ அடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சீட்டில் குற்றம்சாட்டியுள்ளார்.
