சொந்தக் கணவனையே விஷப் பாம்பை விட்டுத் தீண்ட வைத்துக் கொன்ற கொடூரக் குற்றச்சாட்டில் கைதாகி, மீரட் மாவட்டச் சிறைக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கிறாள் தாமிணி. சொகுசு வாழ்க்கையும், காதலின் வக்கிர மோகமும் அவளைக் கொண்டு வந்து நிறுத்திய இடம் — கான்கிரீட் சுவர்களும், இரும்புக் கம்பிகளும் மட்டுமே நிறைந்த நரகத்தின் நுழைவாயில்.
சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த முதல் இரவு… தாமிணிக்கு அது வெறும் இரவல்ல; அவளது மனசாட்சியின் கொடூரமான விசாரணை மேடை!
சிறைச்சாலை வழங்கிய உணவைத் தொடக் கூட அவளுக்கு மனமில்லை. தட்டில் இருந்த உணவு அப்படியே ஆறிக் கிடந்தது. இரவு முழுவதும் தூக்கமின்றி, படுக்கையில் பக்கத்திற்குப் பக்கம் உருண்டு புரண்டு, தன் வாழ்க்கைப் பக்கங்களை நினைத்து அமைதியாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த கணவனின் பெயர், அந்த இருட்டில் அவளைப் பார்த்து நக்கலாகச் சிரிப்பது போலிருந்தது.
அடுத்த நாள் அதிகாலை… சிறையின் வழக்கமான சோதனையும் காலை உணவு நேரமும் வந்தது. அனைத்து பெண் கைதிகளும் ஒரே இடத்தில் கூடியபோதுதான், அந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான வரலாற்றுச் சந்திப்பு நிகழப் பெற்றது.
அங்கே, ஏற்கனவே தன் கொடூரக் குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்த ‘நீல டிரம் வழக்கில் கைதான முஸ்கான் நின்று கொண்டிருந்தாள். கணவனைக் கொடூரமாகக் கொன்று டிரம்மில் அடைத்த முஸ்கானும், பாம்பைக் கடிக்க வைத்துக் கொன்ற தாமிணியும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டனர்.
இரண்டு கொடூரமான குற்றங்களின் பின்னணியில் இருக்கும் இரண்டு பெண்கள்… அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடந்த அந்த உரையாடலில், இருவரின் கண்களும் எதைப் பரிமாறிக் கொண்டன என்பது அந்தச் சிறைச் சுவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
மூத்த சிறைக் கண்காணிப்பாளர் வீரேஷ் ராஜ் சர்மா இதுகுறித்துக் கூறும்போது, “புதிதாகச் சிறைக்கு வரும் எந்தவொரு கைதியும் ஆரம்பத்தில் கடுமையான பயத்திலும் அதிர்ச்சியிலும்தான் இருப்பார்கள். தாமிணியும் அப்படித்தான் இருந்தாள். மற்ற பெண் கைதிகளின் ஆறுதலுக்குப் பிறகே அவள் காலை உணவைச் சாப்பிடத் தொடங்கினாள்” என்றார்.
காதலன் துஷாரின் வக்கிர மோகத்திற்காகக் கணவனின் உயிரைக் குடித்த தாமிணி, சிறைக்கு வந்த பிறகு தன் காதலனைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவனைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவள் தெரிவிக்கவில்லை.
ஆனால், அவளது மனதைப் பிளந்து கொண்டு வெளியே வந்தது அவளது பிஞ்சு மகன் ‘மாணிக்’-கின் நினைவுகள் மட்டுமே!
“என் மகனைப் பார்க்க வேண்டும்… அவனை அழைத்துக் வாருங்கள்” என்று சிறை அதிகாரிகளிடம் கூறிப் பலமுறை அவள் குழந்தையைப் போலக் கதறி அழுதாள். தன் பெற்றோரைக் காண வேண்டும் என்றும் கெஞ்சினாள். காதலால் கண்மூடிப் போய் ஒரு குடும்பத்தையே அழித்த பிறகு, இப்போது தாய்மையின் பாசம் அவளது இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தது.
தன் கொந்தளிப்பான மனதை அமைதிப்படுத்தவும், எண்ணங்களை திசைதிருப்பவும் சிறை நூலகத்தில் இருந்து ஒரு ஆன்மீகப் புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கியிருக்கிறாள்.
ஒரு காலத்தில் ‘ஹேப்பி பர்த்டே டியர்’ என்று சமூக வலைதளங்களில் காதலைப் பொழிந்த அதே கைகள், கூகுளில் ‘மிகவும் வீரியமிக்க விஷப் பாம்பு எது?’ என்று தேடவும் தயங்கவில்லை. இன்று அதே கைகள் ஆன்மீகப் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு, தன் மகனுக்காகக் கண்ணீர் வடிக்கின்றன.
காதல் என்ற போர்வையில் உருவாகும் வக்கிரங்கள், இறுதியில் மனிதனை எப்படிப்பட்ட பாதாளத்தில் தள்ளும் என்பதற்கு தாமிணியின் இந்தச் சிறை வாழ்க்கையே சாட்சி. நீதிமன்ற அனுமதி கிடைத்தால் காதலனுடன் வீடியோ கான்ஃபரன்சிங் பேசலாம் என்று சிறை நிர்வாகம் கூறினாலும், தாமிணியின் தற்போதைய உலகம்… தன் மகனின் நினைவுகளாலும், செய்த தவறுக்கான பிராயச்சித்த தேடலாலும் மட்டுமே சூழப்பட்டிருக்கிறது!
