வங்காளதேசம் நவகாவுன் சதர் உபஜிலாவில் உள்ள நர்ச்சி அரசு தொடக்கப் பள்ளியில், உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அப்துஸ் சலாம் என்பவர், 17 மாணவர்களை மின்சாரக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறை இடைவேளையின் போது, அர்ஜென்டினா கால்பந்து அணி தோல்வியடைந்ததைக் குறித்து மாணவர்கள் சிலர் நையாண்டி பாடல் பாடியுள்ளனர். அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகரான ஆசிரியர் அப்துஸ் சலாம், இதனால் கடும் ஆத்திரமடைந்து வகுப்பறையில் இருந்த 23 மாணவர்களில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 17 பேரை இரக்கமின்றித் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த செய்தி பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் உள்ளூர் மக்களும் கொதித்தெழுந்தனர். ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, புதன்கிழமை இரவு ‘நர்ச்சி மோட்’ பகுதியில் திரண்ட பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்திற்குக் காரணமான ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவருக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆசிரியர் அப்துஸ் சலாம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ள போதிலும், கிராம மக்கள் தங்கள் கொந்தளிப்பைக் குறைக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து முறையான எழுத்துப்பூர்வ புகார் கிடைக்கப்பெற்றவுடன், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்பூர்வமான நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். பள்ளி வகுப்பறையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
See this Instagram video by @noiselessnews https://t.co/lFBPVHBkY9
“>
