தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் இரண்டே வருடத்தில் ஆட்சியைப் பிடித்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருந்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக தள்ளிப்போன நிலையில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை விஜயின் ரசிகர்களும் தமிழக வெற்றி கழகத்தினரும் கொண்டாடி வரும் நிலையில் நேற்று படம் வெளியானபோது தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் என பலரும் படத்தை ஆர்வத்தோடு சென்று பார்த்தனர்.

அதே நேரத்தில் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஜனநாயகன் திரைப்படம் இத்தகைய சூழலில் வெளியானதால் நீட் எதிர்ப்பு போராட்டத்தை திசை திருப்பவே படத்தை இப்போது வெளியிட்டுள்ளதாக சர்ச்சைகள் சமூக வலைதளத்தில் கிளம்பியது. இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இது பற்றி  கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஜனநாயகன் படத்தை பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறு விறுப்பும் ஏற்படும். யாருடைய மூளையையும் சலவை செய்யும் படம் அது அல்ல என்று கூறினார்.

 

அதாவது மாணவர்கள் போராட்டத்தை ஜனநாயகன் மழுங்கடித்து விட்டதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்ப அதற்கு இவ்வாறு சபாநாயகர் பதில் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில் அது சம்பந்தமாக நிருபர்கள் கேள்வி கேட்காமல் பல கேள்விகளை எழுப்பியதால் சற்று டென்ஷன் ஆனவர் சில சமயங்களில் பத்திரிகையாளர்களை பலர் தவிர்ப்பது இதனால்தான் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அதைப் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் தேவையில்லாத மற்ற விஷயங்களை பற்றி கேட்காதீர்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட வராது என கடிந்து கொண்டார்.