சேலம் மாவட்டம், ஆத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா தற்போது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பயணியர் மாளிகை பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர், அப்பகுதி வழியாகச் சென்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அந்த பேனரில் தமிழக முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட உருவப்படமும், அவருக்குப் பின்னால் ராவணனின் உருவமும் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக, பேனரின் கீழ் பகுதியில் நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆன்மீக விழாவில் சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை இதுபோன்று பயன்படுத்துவது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்ததால், இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி பெரிய விவாதத்தைக் கிளப்பின.
கோவில் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும், ஆன்மீகப் பெருவிழாவில் இதுபோன்ற பேனர்கள் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் இணையதளவாசிகளும் பொதுமக்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றமும் அரசும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இதுபோன்று கண்டபடி பேனர்கள் வைக்க அனுமதி அளித்தது யார் என நெட்டிசன்கள் கொந்தளித்தனர்.
இந்த எதிர்ப்பின் தீவிரத்தை உணர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள், நள்ளிரவில் இரவோடு இரவாக நடிகையின் புகைப்படத்தை மறைத்து, அதற்குப் பதிலாக வேறொரு பெண் அம்மன் வேடத்தில் இருக்கும் படத்தை ஒட்டி மாற்றினர்.
இருப்பினும், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய பேனர்களை போலீசார் அதிரடியாகச் சென்று அகற்றினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் பேனர் வைத்தது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், சந்துரு மற்றும் கோகுல் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
