பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு பெண், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை  வீரர் ஒருவர் மீது ஏமாற்றுதல் மற்றும் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரது புகாரின் பேரில் இரண்டு மாதங்களாக வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறை இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஆசிரியை, காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே தனது கையின் நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டு பதறிப்போன போலீஸார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், தற்போது அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியை அளித்துள்ள புகாரின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவீட்டாரின் சம்மதத்துடன் அந்த சிஐஎஸ்எஃப் வீரருக்கும் இவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் ஆடம்பரமாக நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.

அதன் பிறகு, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த வீரர் தன்னிடம் பலமுறை அத்துமீறியதாகவும், தனது அனுமதியின்றி சில ரகசிய வீடியோக்களை எடுத்ததாகவும் ஆசிரியை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்துத் தான் கேட்டபோது, விரைவில் திருமணம் செய்யப் போவதாகக் கூறி அந்த ராணுவ வீரர் தன்னை நம்ப வைத்ததாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக அந்த ஆசிரியையின் தந்தை மரணமடைந்தார்.

தந்தை மறைந்த சில நாட்களிலேயே, அந்த சிஐஎஸ்எஃப் வீரரின் குணம் மாறத் தொடங்கியுள்ளது. இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறி கழன்றுகொண்டதுடன், வேறு ஒரு பெண்ணுடன் ரகசியமாகத் திருமண ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, கடந்த இரண்டு மாதங்களாக நீதிக்காகக் காவல் நிலையப் படிகளையேறி அலைந்தும், எந்தப் பலனும் கிடைக்காததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாவட்டத் துணைக்காவல் கண்காணிப்பாளர் , பெண்ணின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், இந்த  புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள ராணுவ வீரரின் அண்ணன், “எங்கள் குடும்பத்தினருக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. அதை முன்பே கூறிவிட்டோம். இப்போது என் தம்பிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டதால், பழிவாங்கும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி நாடகம் ஆடுகிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.