இந்தியாவில் அரசு வேலை என்பது வாழ்நாள் முழுமைக்குமான பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக அந்தஸ்தை வழங்கக்கூடிய ஒரு உன்னதப் பதவியாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் இளைஞர்கள் ஒரு அரசு வேலைக்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், தமக்கு கிடைத்த உயரிய அரசுப் பதவியை மிகத் துணிச்சலாக உதறித் தள்ளியுள்ளார் ஒரு இளைஞர். இந்திய-நேபாள எல்லையில் சாஸ்திர சீமா பால் பிரிவில் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் ஆகப் பணியாற்றி வந்த அமித் சோனி என்ற முன்னாள் ராணுவ அதிகாரிதான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
View this post on Instagram
இந்தியாவின் மிக உயரிய மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மைப் படிப்பு படிப்பதற்காக அவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்துள்ளார். தாம் அரசு வேலையை விட்டுவிட்டு இந்த எம்பிஏ படிப்பில் சேர்ந்ததன் மூலம் தமக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த செலவு மற்றும் இழப்புகள் சுமார் 74 லட்சம் ரூபாய் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்குடன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஐஐஎம் அகமதாபாத்தில் அவர் பயின்று வரும் ஓராண்டு கால எக்சிகியூட்டிவ் எம்பிஏ படிப்பிற்கான கல்விச் சமர்ப்பணக் கட்டணம் மட்டுமே 37.10 லட்சம் ரூபாயாகும். இதனுடன் சர்வதேச கல்விப் பயணம் மற்றும் இதர வாழ்வாதாரச் செலவுகள் என நேரடியாகவே சுமார் 44 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தையும் விட, அரசு வேலையை பாதியில் விட்டு வெளியேறும் போது அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய ‘ராஜினாமா பாண்ட்’ தொகையாக மட்டுமே அவர் 9.80 லட்சம் ரூபாயைச் செலுத்தியுள்ளார்.
மேலும், அவர் வேலையைத் துறந்ததால் அந்த ஓராண்டு காலத்தில் தமக்குக் கிடைத்திருக்க வேண்டிய அரசுச் சம்பளம் மற்றும் இதர சலுகைகளின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் என்றும், இதையும் சேர்த்தே தாம் இழந்த மொத்தத் தொகை 74 லட்சம் ரூபாய் என்று அமித் சோனி மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். அரசு வேலைகளின் பின்னணியில் இருக்கும் இத்தகைய மறைமுகச் செலவுகள் மற்றும் இழப்புகள் குறித்துப் பலரும் சிந்திக்க வைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்து, எந்தவித மாற்றுத் திட்டமும் இல்லாமல் இந்த ஆபத்தான முடிவை எடுத்தது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். “சில முதலீடுகளை நாம் லட்சங்களில் கணக்கிட முடியாது, படிப்பை முடித்து வெளியே வரும்போது நாம் எப்படிப்பட்ட மனிதராக மாறுகிறோம் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. சீருடையில் இருந்து கார்ப்பரேட் அறைக்கும், எல்லையின் சேவையிலிருந்து வணிக உத்திகளுக்கும் மாறுவது எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம். வசதியான வாழ்க்கையை விட வளர்ச்சியே எனக்கு முக்கியம்” என்று அமித் சோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
