உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான தயானந்த் தம்டா (55), எப்போதையும் போல தனது வழக்கமான பணியை மேற்கொள்வதற்காக பள்ளி வளாகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அதே பள்ளியில் மூத்த எழுத்தாளர் ஆக பணிபுரியும் நவல் கிஷோர் சோரடி என்பவர், தலைமை ஆசிரியரை பின்னாடி இருந்து பயங்கர ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த தலைமை ஆசிரியர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தலைமை ஆசிரியரைக் குத்திவிட்டு தப்பியோட முயன்ற நவல் கிஷோரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர். தப்பியோடிய கொலையாளியைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரை உடனடியாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் துறை ரீதியான தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், சக ஊழியர் ஒருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், இந்த எழுத்தாளர் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த 16 நாட்களாகத் துறைக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்காமல் அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார் என்பதும், பள்ளி அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு நடவடிக்கைகளே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கொலை நடப்பதற்கு முந்தைய நாள் மாலையில்கூட, மாவட்டக் கல்வி அதிகாரிக்கு போன் செய்த நவல் கிஷோர், ஆவேசமாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். அமைதியான குணத்திற்கும், கடமை உணர்ச்சிக்கும் பெயர் போன தலைமை ஆசிரியர் தயானந்த் தம்டாவின் இந்த அகால மரணம், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
