தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னை வடபழனியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வந்ததால் தேர்தல் களம் காலையிலிருந்தே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்தத் தேர்தலில் “நம்ம கே. பாக்யராஜ் அணி” மற்றும் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தலைமையிலான அணி என இரு முனைகளில் கடுமையான போட்டி நிலவியது. இதில் “நம்ம கே. பாக்யராஜ் அணி”யின் சார்பில் தலைவர் பதவிக்கு முன்னணி இயக்குநர் சேரன் களம் இறங்கிப் போட்டியிட்டார். தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், வாக்களிக்க வருபவர்களை சேரன் அணியினர் அழைத்துச் செல்வது குறித்து ஆர்.கே. செல்வமணி தரப்பில் முறையிடப்பட்டது.

இதனால் இரு அணிகளுக்கும் இடையே லேசான வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டு அடங்கியது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சுமுகமாக முடிவடைந்து, உடனடியாக வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கப்பட்டதுஇந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

அதில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த இயக்குநர் சேரன் தலைமையிலான அணி, ஆர்.கே. செல்வமணி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள இயக்குநர் சேரனுக்கும் அவரது அணியினருக்கும் திரையுலகினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.