பக்தி இசை, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகிற்குத் தனது எழுத்துக்களால் அளப்பரிய பங்களிப்பை வழங்கி, முத்திரை பதித்த புகழ்பெற்ற பாடலாசிரியரான டாக்டர் கிருதியா காலமானார். அவரது இந்த திடீர் மறைவு செய்தி, திரையுலகினர், பக்தி இசை ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட உலகில் தனது தனித்துவமான வரிகளால் கவனம் ஈர்த்த டாக்டர் கிருதியா, ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘பரமசிவன்’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். சினிமா உலகைத் தாண்டி, ஆன்மீக உலகில் இவரது வரிகள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. குறிப்பாக, விநாயகப் பெருமானின் பெருமையைப் பாடும் ‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வர வேண்டும்’ என்ற இமாலயப் புகழ்பெற்ற பாடல் இவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இன்றும் பல கோவில் திருவிழாக்களிலும், ஆன்மீக நிகழ்வுகளிலும் முதல் பாடலாக இப்பாடல் ஒலித்துக் கொண்டிருப்பது இவரது எழுத்துக்குக் கிடைத்த சாகாவரமாகும்.
பக்தி இசை ஆல்பங்களில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பிரபல பக்தி இசைப் பாடகர் வீரமணிதாசன் குரலில் வெளியாகி, இன்று வரை கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் நாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற ‘படி பூஜை’ ஆல்பத்தில் உள்ள ஐயப்பன் பாடல்களை எழுதியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற எண்ணற்ற பக்திப் பாடல்கள் மூலம் ஆன்மீக நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார்.
சினிமா, பக்தி இசை மட்டுமன்றி, தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபல மெகா தொடர்கள் பலவற்றிற்கும் மனதைக் கவரும் தலைப்புப் பாடல்களை எழுதி சின்னத்திரையிலும் தடம் பதித்திருந்தார். பாடலாசிரியர் கிருதியாவின் மரணம் ரசிகர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
