மத்தியப் பிரதேச மாநிலம் டெஹ்ரவாரா கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் இரண்டு சிறுமிகள் சனிக்கிழமை காலை கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெஹ்ரவாரா கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர தாகூர் என்பவரின் 16 வயது மகள் கீர்த்தி தாகூர் மற்றும் அவரது சகோதரர் சுகர் சிங் தாகூரின் 17 வயது மகள் பூனம் தாகூர் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூலை 16-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற இந்த சிறுமிகள், நள்ளிரவு 1 மணியளவில் படுக்கையில் இருந்து திடீரென மாயமாகியுள்ளனர்.

குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமிகள் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜூலை 17 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை காலை சிறுமிகளின் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சிறுமி ஒருவரின் செருப்பு கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கிராம மக்களின் உதவியுடன் சுமார் 70 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் இருந்து மோட்டார்கள் மூலம் 40 அடி வரை தண்ணீரை வெளியேற்றி சோதனையிட்டனர்.

தண்ணீரின் அளவு குறைந்ததும், கிணற்றின் உள்ளே இரு சிறுமிகளின் உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கிராமவாசிகளின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், சடலங்கள் மீட்கப்படுவதற்கு முந்தைய நாள் வரை கிராம மக்கள் அதே கிணற்றில் இருந்துதான் தண்ணீர் பிடித்துள்ளனர். ஆனால், அப்போது கிணற்றுக்குள் சடலங்கள் இருப்பது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய  காவல் நிலைய பொறுப்பாளர் நீது சிங் தாகூர், “பெற்றோரின் புகாரின் அடிப்படையில் ஏற்கனவே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, சிறுமிகளில் ஒருவர் தொடர்ந்து பேசி வந்த ஒரு செல்போன் எண் கண்டறியப்பட்டுள்ளது. அந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்று கூறினார்.