டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் மீது மின்விசிறி கழன்று விழுந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை இரவு அரங்கேறியுள்ளது. முகமது அக்பர் (42) என்ற அந்த நோயாளி, கடுமையான உயர் இரத்த அழுத்தம், மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக அவரது சகோதரரால் ஜூலை 18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. அங்குள்ள படுக்கையில் முகமது அக்பருக்கு நர்சிங் அதிகாரி ஒருவர் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக படுக்கைக்கு மேலே இருந்த சீலிங் ஃபேன் திடீரென நோயாளி மற்றும் நர்சிங் அதிகாரி ஆகிய இருவரின் மீதும் கழன்று விழுந்தது. இதில் நோயாளி முகமது அக்பர் மற்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நர்சிங் அதிகாரி ஆகிய இருவருமே படுகாயமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே, அதாவது நள்ளிரவு 12.16 மணியளவில் முகமது அக்பர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த மூன்று மணி நேரத்திற்குள் நோயாளி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், முகமது அக்பரின் இறப்புச் சான்றிதழில், அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உயர் இரத்த அழுத்தம், மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா ஆகிய நோய்களே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விபத்து மருத்துவமனையின் உள்கட்டமைப்பு தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்த அக்பரின் உறவினர்கள், அவசர சிகிச்சை பிரிவில் என்ன நடந்தது என்றும், சிகிச்சையின் தரம் குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். டெல்லியின் பரபரப்பான அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவிலேயே நோயாளிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த விபத்து குறித்து ஜிடிபி மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
