உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே, இரு சிறுவர்களுடன் ஒரு பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்சோஸ் கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் படேல் என்பவரின் மனைவி மீனு (30) மற்றும் அவரது மகன்கள் விபுல் (4), விப்லவ் (6). இதில் மீனு தன் மகன்களுடன் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தற்கொலைக்குக் பின்னணியில் உள்ள காரணங்கள் பார்ப்போரை நெஞ்சம் உருக வைக்கின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மீனுவிற்கும் விகாஸ் படேலிற்கும் திருமணம் நடந்துள்ளது. விகாஸ் சூரத் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது மனைவி மீனுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி போன் செய்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, மீனுவிற்கும் அவரது இரு குழந்தைகளுக்கும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எந்தப் பண உதவியையும் அவர் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. வீட்டில் இரண்டு நாட்களாக உணவின்றி தவித்த மீனு, பக்கத்து வீட்டில் ஒரு கிலோ கோதுமை மாவு கடனாகக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமனார், மாமியார் மற்றும் அண்ணி ஆகியோர், மீனுவை ‘நடத்தை கெட்டவள்’ என்று கூறி மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, மாமியார் சுதாமா தேவி, மாமனார் லோதி படேல் மற்றும் அண்ணி ரேஷ்மா ஆகியோர் மீனுவை அடித்து வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த மீனு, காவல் நிலையத்தின் பெண்கள் உதவி மையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் இதை ஒரு சாதாரண குடும்பத் தகராறாகக் கருதி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவரை வீட்டிற்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். மீனு வீட்டிற்குச் சென்றபோது, அவரது அறையைப் பூட்டிய மாமியார் குடும்பத்தினர், அவரை வீட்டிற்குள் சேர்க்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து கணவன் விகாஸிற்கு மீனு போன் செய்து அழுதபோதும், அவரும் உதவ மறுத்துக் கைவிரித்துள்ளார்.
தகவலறிந்து மீனுவின் பெற்றோர் அங்கு வந்தபோது, அவர்களையும் மாமியார் குடும்பத்தினர் கெட்ட வார்த்தைகளால் திட்டி விரட்டியடித்துள்ளனர். பசி கொடுமை, கணவனின் சந்தேகம், மாமியார் குடும்பத்தின் சித்திரவதை என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் துரத்தப்பட்ட மீனு, வேறு வழியின்றி தனது இரு பிஞ்சு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஓடும் ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய காவல் நிலைய அதிகாரி துர்கா சிங், மீனுவின் சகோதரர் கமலேஷ் அளித்த புகாரின் பேரில் கணவன் விகாஸ், மாமியார் சுதாமா தேவி, மாமனார் லோதி படேல், அண்ணி ரேஷ்மா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதில் மாமனார், மாமியார், அண்ணி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். “அன்று போலீசார் மட்டும் அலட்சியம் காட்டாமல் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தாலோ அல்லது மாமியார் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரித்திருந்தாலோ இந்த 3 உயிர்களும் தப்பியிருக்கும்” என கிராம மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
