ஏர் ஹோஸ்டஸ் (விமானப் பணிப்பெண்) ஆக வேண்டும் என்ற கனவை சிலர் கொண்டிருப்பது இயல்புதான். இந்த வேலை கிடைத்துவிட்டால், விமானத்தில் பறந்து உலகையே வலம் வரலாம் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. மேலும், விமான நிறுவனங்கள் தங்களது பணிப்பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளையும், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் வாரி வழங்குகின்றன. ஆனால், அதே வேளையில் இந்த வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள் பல கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் விதிகளை மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
விமானப் பணிப்பெண் வேலை என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருப்பதால், இந்த வேலை குறித்து சமுதாயத்தில் பலவிதமான கருத்துகளும், தவறான புரிதல்களும் நிலவி வருகின்றன. அதில் மிக முக்கியமானது, “ஒரு பெண் ஏர் ஹோஸ்டஸ் ஆகிவிட்டால், அவரால் வாழ்நாளில் திருமணமே செய்துகொள்ள முடியாது” என்பதுதான். ஏர் ஹோஸ்டஸ்களுக்குத் திருமணம் செய்ய அனுமதி இல்லை என்று பலராலும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை நாம் விரிவாகப் பார்ப்போம்.
உண்மையில், விமானப் பணிப்பெண்களின் வாழ்க்கையும் மற்ற சாதாரண பெண்களின் வாழ்க்கையைப் போன்றதே ஆகும். பணி நேரத்தைத் தவிர்த்து அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை உள்ளது. மற்ற பெண்களைப் போலவே காதலிப்பதற்கும், தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கும் முழு உரிமை உண்டு.
எனவே, ஏர் ஹோஸ்டஸாகப் பணிபுரியும் பெண்கள் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். அவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற எந்தவொரு தடையும், கட்டுப்பாடும் விமான நிறுவனங்களால் விதிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, திருமணத்திற்குப் பிறகு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அவர்களுக்கு உரிய விடுமுறைகளும் வழங்கப்படுகின்றன. பெண்கள் இந்த வேலையில் சேருவதற்கு முன்னரோ அல்லது வேலையில் சேர்ந்த பிறகோ, எப்போது வேண்டுமானாலும் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
