மகாராஷ்டிர மாநிலம் கண்டாலா கிராம அரசுப் பள்ளியில் பள்ளி வேலை நேரத்தில் தலைமை ஆசிரியை வகுப்பறையில் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரும் பெற்றோர்களும் பள்ளிக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வட்டாரக் கல்வி அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுதிர் வாசுதேவ் தோகேயின் மகன் மாலையில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து, “வகுப்பறையில் மேடம் தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதிர் உடனடியாகப் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, அந்த ஆசிரியை உண்மையில் தூங்கிக் கொண்டிருப்பது உறுதியானது. அதுமட்டுமன்றி, அந்தப் பள்ளியில் ஆசிரியராக இல்லாத அவரது கணவர், தலைமை ஆசிரியையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, முழு போதையில் அங்கிருந்த பெற்றோர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
यवतमाळ :
नेर तालुक्यातील खंडाळा येथे शाळेच्या वेळेत मुख्याध्यापिका झोपेत
मद्यधुंद पती मुख्याध्यापकांच्या खुर्चीत
संतप्त पालकांनी शाळेला ठोकले कुलूप pic.twitter.com/CE8D5owaWx— ✧ 𝕾𝖍𝖚𝖇𝖍𝖆𝖒 ✧ (@shubham_pb) July 18, 2026
கிராம மக்களின் குற்றச்சாட்டின்படி, இந்த ஆசிரியை இப்பள்ளிக்கு வந்ததில் இருந்தே 1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்தப் பள்ளியிலிருந்து மாற்றி, வேறு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். ஆசிரியை முறையான நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், இதைப் பற்றிக் கேள்வி கேட்கும் பெற்றோர்களை அவர் மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தேர்தல் தொடர்பான முக்கிய அரசுப் பணிகளையும் அவர் சரிவரச் செய்யாமல் புறக்கணித்துள்ளதாகத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வட்டாரக் கல்வி மையத் தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ஆனால், அதற்குள் அந்த ஆசிரியை தனது கணவருடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து விளக்கமளித்த வட்டாரக் கல்வி அதிகாரி மங்கேஷ் தேஷ்பாண்டே, “தலைமை ஆசிரியை மீதான புகார் கிடைத்துள்ளது. திங்கட்கிழமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அதற்கு முன்னெச்சரிக்கையாக அவர் தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார். இந்தத் திடீர் போராட்டத்தின் போது கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் திரளாக உடனிருந்தனர்.
