ஒரு மனிதன் திடீரென மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, முதலில் அவனைக் கைவிடுவது அவனது சொந்த பந்தங்களாகத்தான் இருக்கும். ஆனால், அதே சூழ்நிலை ஒருவனின் சுயமரியாதையை உலுக்கினால், அவன் எதையும் சாதிக்கும் வலிமையைப் பெற்றுவிடுகிறான். அதற்குச் சான்றாக, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் உபெர் பைக் ஓட்டுநர் ஒருவரின் நெகிழ்ச்சியான கதை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல உள்ளடக்க உருவாக்குநரான ஆஸ்தா சேத் என்பவரிடம், அந்த ஓட்டுநர் தனது வாழ்க்கையில் நடந்த அதிரடித் திருப்பங்களைப் பகிர்ந்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், நொய்டாவில் உள்ள தனது உறவினர் ஒருவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வந்த நிலையில், “உன்னால் இனி தொழிற்சாலையில் எந்தவொரு கனமான பொருட்களையும் தூக்க முடியாது, நீ இந்த வேலைக்கு தகுதியில்லாதவன்” என்று கூறி, அந்தச் சொந்தக்காரர் அவரை வேலையை விட்டுத் தூக்கியுள்ளார். மருத்துவச் செலவுகளுடனும், பணத்தேவையுடனும் தவித்த அந்த இக்கட்டான சூழ்நிலையில், சொந்த உறவினரே துரோகம் செய்தது அவரைப் பெரிதும் காயப்படுத்தியுள்ளது.
View this post on Instagram
இருப்பினும் அவர் தன் வறுமைக்கோ இடம் கொடுக்கவில்லை. தனக்கு நேர்ந்த அவமானத்திற்குத் தனது உழைப்பின் மூலம் பதிலடி கொடுக்க நினைத்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவி ஒரு வாடகை ஸ்கூட்டரை எடுத்துக் கொடுத்துள்ளார். அதன் மூலம் இரண்டு மாதங்கள் டெல்லி முழுவதையும் சுற்றிப் பார்த்து வழிகளைத் தெரிந்து கொண்டார். பின்னர், அவரது மனைவி அவருக்கு ஒரு புதிய பைக்கை வாங்கித் தர, உபெர் ஓட்டுநராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உழைத்து, மாதம் ₹50,000-க்கும் அதிகமாக அவர் சம்பாதித்து வருகிறார்.
இந்தக் கதையின் சுவாரசியமான திருப்பமே, அவர் வறுமைக்காக இந்த வேலை செய்யவில்லை என்பதுதான். நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தலா ₹80 லட்சம் மதிப்புள்ள இரண்டு சொந்த பிளாட்கள் அவருக்கு உள்ளன. அதன் மூலம் மட்டுமே அவருக்கு மாதந்தோறும் ₹80,000 வாடகையாகக் கிடைக்கிறது. “நான் வீட்டில் சும்மா உட்கார விரும்பவில்லை, என்னை அசிங்கப்படுத்தியவருக்கு நான் வீணாய்ப் போகவில்லை என்பதைக் காட்டவே உழைக்கிறேன்” என்கிறார் அவர்.
தனக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், ஆண் வாரிசு மீது தங்களுக்கு ஆசையில்லை என்றும் கூறும் அவர், மகள்களின் திருமணத்திற்காக அந்த பிளாட்களை விற்றுச் சிறப்பான முறையில் செய்து முடிப்பேன் என்றும், தனது முதுமைக் காலத்தைப் பற்றிக் கவலையில்லை என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார். எந்தவொரு பந்தாவும் இல்லாமல், மிகச் சாதாரணமாக அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கானோரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
