மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின், வைஷ்ணவி அவாரே (21) என்ற இளம்பெண் அவரது முன்னாள் லிவ்-இன் பார்ட்னரான சாஹில் லவ்ஹாரே (26) என்பவரால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, கொலையாளி சாஹிலும் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரக் கொலைக்குக் காரணம், வைஷ்ணவி வேறொரு நபரைத் திருமணம் செய்யத் தயாராக இருந்ததுதான் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட வைஷ்ணவியும், கொலையாளி சாஹிலும் காதலித்து, ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் வேலை தேடுவதற்காக வைஷ்ணவி நாசிக் நகருக்கு வந்து, இந்திராநகரில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார். இதற்கிடையில், வைஷ்ணவிக்கு அவரது பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமண நிச்சயம் செய்துள்ளனர். இந்த விஷயம் சாஹிலுக்குத் தெரியவந்ததும் அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வைஷ்ணவியைச் சந்தித்துப் பேசுவதற்காக சாஹில் அவரது விடுதிக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணர்ந்த வைஷ்ணவி, உடனடியாகத் தனது வருங்காலக் கணவருக்குப் போன் செய்து, “சாஹில் இங்கதான் இருக்கான், சீக்கிரம் வா…” என்று பதற்றத்துடன் கூறிவிட்டு போனை கட் செய்யாமல் வைத்துள்ளார். வேலை செய்துகொண்டிருந்த அந்த இளைஞர் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்துள்ளார். வரும் வழியிலும் போன் ஆன்லைனிலேயே இருந்ததால், அவர்கள் இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பயங்கரமாகச் சண்டையிட்டுக் கொண்டதை அந்த இளைஞர் கேட்டுக்கொண்டே வந்துள்ளார்.
திடீரென சண்டையின் உச்சக்கட்டமாக, சாஹில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைஷ்ணவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். வைஷ்ணவியின் அலறல் சத்தம் போனில் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சாஹில் அந்த இளைஞரிடம், “வைஷு முடிந்துவிட்டாள்என்று கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வருங்காலக் கணவர் மற்றும் அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த வைஷ்ணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், சனிக்கிழமை அதிகாலை அந்த பகுதியில் உள்ள மரத்தில் சாஹில் பிணமாகத் தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வைஷ்ணவியின் வருங்காலக் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
