இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான மாதச் சம்பள வேலையைத் தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரோ தங்களின் சொந்த உழைப்பை நம்பி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான இளைஞரின் வெற்றிக் கதைதான் தற்போது சமூக வலைதளமான ‘எக்ஸ் தளத்தில் வைரலாகி பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. அங்கித் பாண்டே என்ற பயனர் பகிர்ந்துள்ள தனது பக்கத்து வீட்டு இளைஞரின் இந்த வெற்றிக் கதை, நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த இளைஞர் முன்பு ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் மாதம் ரூ.38,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். வேலைப் பளு காரணமாக அக்கம் பக்கத்தினரிடம் பேசக்கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த மே மாதம் திடீரென தனது வேலையை அவர் ராஜினாமா செய்தார். இதைக் கேட்ட உறவினர்களும், தெரிந்தவர்களும் “நல்ல வேலையை விட்டுவிட்டு சொந்தக் காலில் நீயே கோடாரியைப் போட்டுக் கொள்கிறாயே, இது பெரிய முட்டாள்தனம்” என்று கூறி அவரை ஏளனம் செய்தனர். ஆனால், மக்களின் எதிர்மறைப் பேச்சுகளைப் பொருட்படுத்தாத அந்த இளைஞர், தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

சுமார் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அழகிய வடிவமைப்புடன் ஒரு தேநீர் கடையைத் தொடங்கினார். கடையை நேர்த்தியாக நடத்த தேநீர் தயாரிக்கவும், பரிமாறவும் இரண்டு பெண் ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்தினார். அங்கு சாதாரண டீ 10 ரூபாய்க்கும், பிரீமியம் டீ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டோ ஸ்டாண்ட் பகுதி என்பதால் கடை தொடங்கிய குறுகிய காலத்திலேயே வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. தற்போது தினமும் சராசரியாக 400 கப்புகள் டீ விற்பனையாகி, நாளொன்றுக்கு ரூ.6,000 வரை வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் அவரது மாத வருவாய் சுமார் ரூ.1.8 லட்சமாக உயர்ந்தது.

மாதாந்திரச் செலவுகளான கடை வாடகை ரூ.25,000, ஊழியர்களின் சம்பளம் ரூ.30,000, பால், சர்க்கரை போன்ற மூலப்பொருட்கள் மற்றும் மின்சாரக் கட்டணம் ரூ.25,000 என மொத்தம் ரூ.80,000 செலவு போக, அனைத்து வரிகளையும் தாண்டி அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் நிகர லாபமாகக் கிடைக்கிறது. இது அவர் முன்பு வாங்கிய சம்பளத்தை விட இரண்டரை மடங்கு அதிகம்! இத்துடன் அவர் நின்றுவிடவில்லை. இந்தத் தேநீர் கடையின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அருகிலேயே வடா பாவ், சமோசா மற்றும் ஜிலேபி விற்பனை செய்யும் புதிய உணவகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். தனது இந்த புதிய தொழில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அண்டை வீட்டாரான அங்கித்திற்கு இனிப்புப் பெட்டி வழங்கியுள்ளார். துணிச்சலும் உழைப்பும் இருந்தால் சொந்தத் தொழிலில் சாதிக்கலாம் என்பதற்கு இந்த இளைஞரே ஆகச்சிறந்த உதாரணம்.