இன்றைய கடுமையான வேலைவாய்ப்பு சந்தையில் போராடி, மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மாதத்திற்கு ₹40,000 உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பைப் பெற்ற இளம் பட்டதாரி ஒருவர், அங்குள்ள தங்குமிட வாடகையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தனது சம்பளத்தில் நான்கில் மூன்று பங்கு வாடகைக்கே சென்றுவிடும் என்பதால், இந்த வேலையை ஏற்பது நிதியியல் ரீதியாகச் சரியான முடிவா என்ற தனது குழப்பத்தை அவர் சமூக வலைத்தளமான ரெடிட் (பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அவர் தனது பதிவில், “நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மும்பையில் இந்த இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைத்தது முதலில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், எனது அலுவலகம் மும்பையின் முக்கியப் பகுதியான லோயர் பரேலில் அமைந்துள்ளது. அதற்கு அருகிலோ அல்லது ஓரளவு எளிதாக வந்து செல்லக்கூடிய தூரத்திலோ ஒரு நல்ல பிளாட் அல்லது பிஜி தங்குமிடம் தேடியபோது எனது தலை சுற்றத் தொடங்கிவிட்டது. ஒரு சுமாரான தங்குமிடத்திற்கே மாதத்திற்கு ₹30,000 வரை வாடகை கேட்கிறார்கள்” என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை போக மீதமிருக்கும் ₹10,000 தொகையைக் கொண்டு மும்பை போன்ற ஒரு பெருநகரத்தில் உணவு, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிப்பது சாத்தியமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக, இந்த இன்டர்ன்ஷிப்பைத் தொடர வேண்டுமென்றால் அவர் ஒவ்வொரு மாதமும் தனது செலவிற்காகப் பெற்றோரிடமிருந்து கூடுதல் பணம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
“ஒரு வேலைக்குச் சென்றுவிட்டு, கையில் இருக்கும் பணத்தை இழப்பது முட்டாள்தனமா? அல்லது கரியரின் ஆரம்பக்கட்ட முதலீடாக இதைக் கருதி சகித்துக் கொள்ள வேண்டுமா? வேலைவாய்ப்பு சந்தையில் நுழைவதற்கும், நெட்வொர்க்கிங் அமைப்பதற்கும் இந்த அனுபவம் உதவும் என்பதால் இதைத் தவறவிடவும் மனமில்லை. ஆனால், ₹40,000 சம்பாதித்து ₹30,000 வாடகை கொடுப்பது வலிக்கிறது” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
